Sunday, April 18, 2010

கோடை வள்ளல்




என் இனிய பதிவுலக நண்பர்களுக்கு.....

"என்னடா இது... ரெண்டு மூணு பதிவு போட்டுட்டு வெட்டி எங்கேயோ ஓடிடுச்சு" என்று எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அது தான் கிடையாது...

கோடைக்காலம் தொடங்கி விட்டது...இதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவை இல்லை தான்....அனால் கோடை என்ற உடன் உங்களுக்கு நினைவுக்கு வருவது என்ன? எனக்கெல்லாம் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களுக்காக மட்டுமே கோடையை கொண்டாடத் தோன்றும். மார்க்கெட்-இல் புதிதாக வரும் பச்சை மாங்காயை பருப்பு சாம்பாருக்கு கடித்துக் கொண்டு சாப்பிடுவது, கம்பங்கூழ் செய்து பச்சை மிளகாய்களை வதக்கிக் கலந்து சாப்பிடுவது, தயிர் சாதம் மட்டுமே செய்து மோர் மிளகாய் , கருவேப்பிலை துவையல் , இஞ்சித் துவையல், எலுமிச்சை ஊறுகாய் என்று சகல விதமான side dish-களுடன் உள்ளே தள்ளுவது, rasna கலந்து ஆண்ட குண்டா அளவுகளில் குடிப்பது - இவ்விதமாக, பர வெட்டியாக இருந்த நான் படு பிசியாகி விட்டேன். இத்துடன் நான் செய்த ஒரு பெரிய்ய தவறால் தான் பதிவு பக்கம் வர முடியாமல் செய்து விட்டது. கமலா ஆரஞ்சு சீசன் தொடங்கி ஊரெல்லாம் எங்கு பார்த்தாலும் அழகாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். எனக்கும் கமலா ஆரஞ்சு-கும் ஏழாம் பொருத்தம். ஆனாலும் ஆசை யாரை விட்டது? ஒரேடியாக பத்து பழம் உள்ளே தள்ளியதும் தொண்டை கட்டிக் கொண்டு காய்ச்சல் வந்து டாக்டரிடம் ஊசி போட்டுக் கொண்டு - இதில் வேறு ஒரு மூன்று நாட்கள் காலவிரயம்.

சரி...போனது போகட்டும்...இந்த 17 நாட்களில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள்

என் இரண்டேகால் வயதான ரெட்டைவால்கள் அவர்களது பள்ளி ஆண்டு விழாவில் (playschool) முதன்முதலாய் அழகான் ஆடைகள் அணிந்து மேடையேறி ஒரு சிறிய நடனமாடினார்கள். உண்மையில் கற்றுக்கொடுக்கப்பட்ட எந்த அபிநயத்தையும் அவர்கள் செய்ததாகத் தெரியவில்லை . அனால் மேடையில் இருந்த மற்ற நான்கு குழந்தைகளும் ஆடாமால் அழுதபடியே நின்றதால் எல்லோர் கவனமும் இவர்கள் மீது தான் இருநதது. இவர்கள் ஆடிய சொந்த ஆட்டத்திற்கு தான் பலத்த கரகோஷங்கள்...என்னவென்று சொல்ல....எங்கள் எல்லோர் மனங்களும் பூரித்துப் போயின...

பதிவு பக்கம் வராமலிருந்த பொது மூன்று படங்கள் பார்த்தேன்...அதற்கு மேலே கூட பார்த்திருப்பேன்...ஆனால் மனதில் நின்றவை இவை மூன்று தான்...அதனால் இதோ என் கருத்துகள்...

அவதார் - சத்யம் திரையரங்கில் 3D யில் பார்த்த போது இந்த படம் என்னுள் ஒரு பெரிய்ய பாதிப்பை ஏற்படுத்தியது. நாம் இயற்கையை நேசிப்பதில்லை என்கிற குற்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. மனிதர்களும், விலங்குகளும், செடிகளும், கொடிகளும், மரங்களும் - இன்னும் சொல்லப் போனால் எல்லா உயிர்களும் ஒரே பிரபஞ்ச பரம்பொருளுடன்(Eywa) இணைந்து செயல் படுகின்றன என்கிற உயர்ந்த தத்துவம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. நானும் இயற்கைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆழமான எண்ணம் தோன்றியுள்ளது. இந்த வருடத்தில் இருந்து கொடுமையான கொடைக்காலத்திலாவது விலங்கினங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஒரு உதவ வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்.

பையா - இந்த படத்தை பற்றி பெரிதாக சொல்லவதற்கு ஒன்றும் இல்லை. மூன்றே வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் - பாடல்கள், சண்டைக்காட்சிகள், மிட்சுபிஷி கார். அவ்வளவு தான். 'damsel in distress' எனப்படும் பழைய பார்முலாவில் அடங்கும் நாயகிக்கு உதவ பெங்களூரில் இருந்து மும்பை வரை காரில் அழைத்து போகிறார் ஹீரோ. என்னமோ நாமே மூன்று நாட்கள் காரில் சென்று வந்தது போல் அலுப்பாக இருக்கிறது. ஆனாலும் கார்த்தி ஏமாற்றவில்லை. என்ன ஒரு விஷயம் வருத்தமாக இருக்கிறது என்றால் - உதவாக்கரை ரோலில் அறிமுகமாகி, கூலியாளாக நடித்து, இப்போது தான் காரோட்டி(தேர் ஓட்டறவன் தேரோட்டி-ன்ன, கார் ஓட்டறவன் காரோட்டி தானே?) ரோலில் நடிக்கிறார். இதற்க்கப்பரம் என்ன ரோல் கார்த்தி? ஆபீஸ் பாய், கிளெர்க், ஆபிசர், சூபெர்வைசெர், மேனேஜர் போன்ற வேடங்களில் நடித்து விட்டு சஞ்சய் ராமசாமி போன்ற CEO வேடத்தில் நடிக்க எத்தனை வருடங்கள் பிடிக்குமோ....அதெல்லாம் வேண்டாம் கார்த்தி....இன்றைய நிலையில் இருக்கும் ஆபீஸ் போலிடிக்ஸ்கு இதெல்லாம் நடக்க இன்னும் 30 வருடங்கள் கூட பிடிக்கலாம். அதானால் இனிமேலாவது கொஞ்சம் சீக்கிரமாக முன்னேரும்படியான ரோலஸ்-இல் நடிக்கவும்.(ஓவராக ஜொள்ளு விடுகிறேன் என்று நினைப்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என்னருகில் உட்கார்ந்து தமன்னாவை பார்த்து ஜொள்ளு விட்டு தன் கைக்குட்டை போதாமல் என் துப்பட்டாவை கைப்பிடி துணியை விட மோசமாக நனைத்த என் கணவரை விட நான் தேவலை என்பது என் தாழ்மையான கருத்து).

Fracture - பையா படத்திற்கு நைட் ஷோ கிளம்புவதற்கு முன் டிவியில் இந்த படம் பார்க்க நேர்ந்தது. ஆரம்பம் மட்டுமே பார்க்க முடிந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது.ஒரு நல்ல படத்தை இழக்கிறோமோ என்கிற ஒரு சின்ன உறுத்தலோடு தான் டிவியை அணைத்து விட்டு கிளம்பினோம். ஆனால் இன்றைக்கு மறுபடியும் அந்த படத்தை HBO-vil ஒளிபரப்பினார்கள். ஒரு படத்தின் ஆரம்பத்தில் ஒரு சின்ன suspense -ai வைத்து இறுதி வரை ஒரு சுவாரஸ்யமான ஆடு-புலி ஆட்டத்தை நடத்திக் காட்டி இருக்கிறார்கள். அந்த suspense இறுதியில் உடைபடும் வரையில் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இத்தனை சாமர்த்தியமாக பின்னப்பட்ட ஒரு கதையை பார்த்து வெகு நாட்களாகின்றன. இந்தப் படத்தை பார்த்தவர்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் படத்தின் பெயர் காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்.

Thursday, April 1, 2010

நாம சந்கீர்தனமும் ரெட் பஸ்ஸூம்


ஸ்ரீமன் நாராயணனை அடைய பெரிய தபசுகள் எதுவும் தேவை இல்லை. நாமசங்கீர்த்தனம் மட்டுமே போதுமானது என்று உலகுக்கு உணர்த்திய பக்தர்கள், துருவனும் பிரகலாதனும். சாதரணமாக குழந்தைகளுக்கு தான் ஒரு அசாதாரணமான வைராக்கியம் இருக்குமாம். "நாராயணன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்" என்கிற சொற்றொடர் உண்மை என்றால், குழந்தைகளின் வைராக்கியம் எந்த உருவத்திலும் இறைவனை பிரத்யக்ஷ்மாக்கும்.

"The wheels of the bus go round and round
round and round, round and round
The wheels of the bus go round and round
All day long"

இப்படியாகத் தொடங்கும் அந்தப் பாடல். என் இரண்டேகால் வயது மகன்களுக்கு மிகப் பிடித்த அந்த பாடல் பேருந்தின் ஒவ்வொரு பாகத்தின் செயல் பாடு பற்றியும் சொல்லி அவர்களிருவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். என் இரண்டாவது மகனான வருணுக்கு நாங்கள் தொலைகாட்சி வாங்கியதே அந்த பஸ் பாடலை பார்க்க தான் என்கிற எண்ணம் எப்படி வந்ததோ தெரிய வில்லை. இவன் அந்த பாடலைப் பார்க்கும் விதத்தில் ஸ்ரீமன் நாராயணன் விரைவிலேயே பஸ் உருவில் எங்கள் வீட்டில் ப்ரத்யக்ஷமாகி 'குழந்தாய், நீ வேண்டுவதை கேள்' என்று கேட்கப்போகிறார். ஆனாலும் இந்த வருண் பயல் "பஸ் ரைம் போடு...நீ வேணா போ" என்று அழுது பெருமாளை கடுப்படிக்க போகிறான்.

குழந்தளுக்காக ரைம்ஸ் cd வாங்கப் போய் கடைசியில் அது எங்களுக்கு இப்படி வினையாகும் என்று துளியும் நினைக்கவில்லை. காலையில் கண் விழித்தது முதல் இரவு கண்ணயர்வது வரை அதே பாடலா? என் அப்பா காலையில் பூஜை செய்பவர். இவனது இந்தப் பாடல் வெறியால் அவர் சொல்லும் ஸ்லோகங்களை மறந்து "The bell on the bus goes ting-a-ling-ling" என்று ஏதோ பூஜையறையில் உட்க்கார்ந்து பிதற்றிக் கொண்டிருக்கிறார். அவர் தேவலை. என்னவர் கல்லூரியில் படிக்கும் தருதலை மாணவர் போலாகி விட்டார். எங்கு பஸ்ஸை பார்த்தாலும் கல்லாலடிக்க முற்படுகிறார். பாவம்...அவருக்கு இந்த பஸ் ரைமால் 'IPL பார்க்க முடியவில்லையே' என்கிற ஆதங்கம். ஆனால் இத்தனையிலும் கலங்காமல் தன் பாட்டுக்கு தன் வேலையில் மூழ்கி இருப்பது என் அம்மா மட்டுமே. வடாமிற்கு மாவு கிண்டுவதாகட்டும், அடைக்கும் அரைப்பதாகட்டும், ஒரு சின்ன குரலில் "humpty dumpty sat on a wall" என்று பாடிய படியே தன வேலைகள் அனைத்தயும் செவ்வனே செய்து விடுவார். அன்று அதிசயமாக என்னவர் ஏதோ ஒரு பாடலை வெகு நேரமாக முனகிகே கொண்டிருந்தார்.இவராவது பாடுவதாவது என்று உன்னிப்பாக கவனித்ததில் அவர் முனகிக் கொண்டிருந்தது - "Tick Tock Tick Tock merrily sings the clock". கஷ்டம் கஷ்டம் என்று தலையில் அடித்துக் கொண்டேன்.

சில நாட்களுக்கு முன்னால் ஒரு சாமியாரின் லீலைகளை தொலைக்காட்சியில் காட்டி ஊரே களேபரமாகிக் கொண்டிருந்த சமயம், பக்கத்துக்கு வீட்டு பெண்மணி வந்து "என்ன அநியாயம் பார்த்தீர்களா?" என்று கேட்டார்.நாங்களும் "ஆமாங்க நாளைக்கு பவர் ஷட்டவுனாமே ...பஸ் ரைம் போடாட்டா எங்க வீட்டுல பிரளயம் வந்துடுமே" என்று நாங்கள் எங்கள் பிரச்னையை சொல்ல போய், கடைசியில் அந்த பெண்மணி எங்கள் எல்லோரையும் மட்டமான ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றார். அதன் பின் ஏதோ வில்லங்கமான விஷயம் இருப்பதை உணர்ந்த என் கணவர் எனக்கு தமிழ் பத்திரிக்கைகள் வாங்கி தந்து எனது உலக அறிவை மிளிரச்செய்தார்.

என் மகன்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறார்கள். இதே வேகத்தில் அந்த CD தேய்ந்து விடாதா என்ற ஏக்கத்துடன் நான் காத்திருக்கிறேன்........